இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படமான “ஆர்யா 34” படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கு “ஆர்யா 34” என தற்போதைக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ZEE ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், உருவாகும் இப்புதிய படத்திற்கான பூஜை இன்று எளிமையாக நடைபெற்றது.
இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களைத் தந்த ZEE ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ”ஆர்யா 34” படத்தை தயாரிக்கின்றன. டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன் என மாறுபட்ட திரைப்படங்கள் மூலம் தொடர் வெற்றிகளைத் தந்து வரும் நடிகர் ஆர்யா, இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இத்னானி, இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
கிராமத்து பின்னணியில் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்திற்கு, ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ட்ரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் உடன் இணைந்தது குறித்து ZEE ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், “இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து மாறுப்பட்ட பாத்திரங்களில் வித்தியாசமான படங்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர் முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர்.
இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நாங்கள் அனைவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தரும் நல்ல படைப்பை வழங்குவோம் என்று நம்புகிறோம்” என்றார்.
விருமன் திரைப்படத்தைத் தொடர்ந்து கிராமத்தின் மணம் வீசும் புதிய படைப்பாக ஆர்யா 34 அமைந்து , ஆர்யாவை திரைத்துறையில் அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு சேர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.







