மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பயனாளிகள் தேர்வு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ள நிலையில், அதுதொடர்பான முதற்கட்ட கூட்டம் ஜூன் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் பயனாளிகள் தேர்வு நடைமுறைகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் தேர்வு எப்படி?
சென்னை தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பயனாளிகள் தேர்வு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியாய விலைக்கடை அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்வது, பகுதிவாரியாக முகாம்கள் அமைப்பது, மின் ஆளுமை முகமை செயலியின் மூலமாக பயனாளிகள் பதிவு செய்வது, வங்கி மூலம் விநியோகம் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
இந்த கூட்டத்தில், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள், வங்கி அதிகாரிகள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில், மாலை 5 மணிக்கு மேல் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.







