”தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” – சபாநாயகர் அப்பாவு!

“திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பின் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பின் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி
நடைபெறுகிறது. நிலப்பிரச்னை, குடும்ப பிரச்னை உள்ளிட்ட விரோதத்தின் காரணமாகவே கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மீது அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டு, முன் யோசனையோடு செயல்படுவதற்கு தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே வரவேற்பு அளித்துள்ளது. நிச்சயமாக தொகுதி மறுவரையறை பிரச்னையில் நல்ல முடிவு வரும்.  பல மாநிலங்களில் மொழி அழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதையே செய்து விடலாம் என தற்போது மத்திய அரசு செயல்படுகிறது.

மு.க.ஸ்டாலின் மிக உறுதியோடு அதனை எதிர்த்து வருகிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது. தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என முதலமைச்சர் எடுக்கக்கூடிய முன்னெடுப்பு கண்டிப்பாக வெற்றி பெறும். பாஜக ஆளாத மாநிலத்தில் தொகுதி மறுசீரமைப்பு செய்து திட்டமிட்டு நெருக்கடி கொடுப்பது உண்மைதான். தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் சிலர் சாதிய ரீதியான பிரச்னை என ஒவ்வொரு
பிரச்சனையாக உருவாக்கி பார்க்கிறார்கள்.

அனைத்து குடும்பத்தினரும் தங்களது குழந்தைகளை கட்டுப்படுத்தி வையுங்கள்.  மாணவர் பருவத்திலேயே மாணவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க அறிவுறுத்தியுள்ளோம். தவறாக மாணவர்களை வழிநடத்தும் கூட்டாளிகளை கண்டறிந்து மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என
தெரிவித்துள்ளோம். இந்த அரசு மாணவர்களுக்கு நல்ல படிப்பை கொடுத்து, நல்ல வேலைவாய்ப்பை உறுதி செய்து வருகிறது.

சில பேர் சிறார்களுக்கு பணத்தை கொடுத்து மூளை சலவை செய்து தவறாக வழிநடத்துகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டில் எங்கும் சாதி பிரச்சனை நடைபெறவில்லை.  சாதி பிரச்னை நடந்தால் ஒருவர் ஒரு பகுதியில் இருந்து, இன்னொரு பகுதிக்கு செல்லவே முடியாது. பள்ளிகளில் பிரச்சனை நடந்தால் காவல்துறை செல்லக்கூடாது.

அங்குள்ள ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்டவைகளே
பேசி முடித்துக் கொள்ள வேண்டும். முடியாத காரியமாக இருந்தால் மட்டுமே காவல்துறையை அழைத்து நடவடிக்கை எடுக்க பேச வேண்டும். சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு முழு அனுமதி கொடுத்து, ஜனநாயக ரீதியில் வழிநடத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் பாராமல் ஜனநாயக ரீதியில் சட்டசபை வழிநடத்தப்படுகிறது. தமிழக சட்டமன்றம் சட்டப்படி, விதிப்படி, மரபுப் படி நடத்தப்படுகிறது என தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.