புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா
தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர்.
2 நாட்கள் அரசு முறை பயணமாக புதுச்சேரி சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி
முர்மூவை இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து மாநில பிரச்சினைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் அது கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மூடப்பட்டுள்ள அரசு சார்பு நிறுவன ஆலைகளை மீண்டும் திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரிக்கு என புதிய தொழில் கொள்கை உருவாக்கி தொழிற்சாலைகளுக்கான சலுகைகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும் துணை நிலை ஆளுநர் முழுமையான அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பாதிக்கப்படுகிறது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.







