தலையை துண்டித்துவிடுவேன் என போலீசாரை மிரட்டிய ரவுடி! வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

தலையை துண்டித்து விடுவேன் என போலீசாரை அரிவாளுடன் ரவுடி மிரட்டிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தலைமறைவான ரவுடியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை…

தலையை துண்டித்து விடுவேன் என போலீசாரை அரிவாளுடன் ரவுடி மிரட்டிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தலைமறைவான ரவுடியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ஒருவரது வீட்டில் தகராறு நடப்பதாக தென்கரை காவல் நிலைய ரோந்து போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன், காமராஜ் ஆகியோர் ரோந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“யார் உங்களை இந்த பகுதிக்கு வரச் சொன்னது. இங்கு வர வேண்டும் என்றால் எங்களது சாதி சங்கத் தலைவர் அனுமதி பெற்று வர வேண்டும்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீபக் ரவிச்சந்திரனும், காமராஜும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனை ரோந்து போலீசார் செல்போனில் பதிவு செய்தனர். வீடியோ பதிவு செய்யவதை தெரிந்ததும் 2 பேரும் ஆபாச வார்த்தைகளிலும், அரிவாளை எடுத்து வந்து போலீசாரை காண்பித்து தலைதுண்டித்து கொன்று விடுவதாக மிரட்டியதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

அரிவாளை எடுத்து மிரட்டியதை கண்டு அவர்களது குடும்பத்தினர் போலீசாரின் காலில் விழுந்து இங்கிருந்து நீங்கள் சென்று விடுங்கள் என்று கெஞ்சினர். இவை அனைத்தையும் ரோந்து போலீசார் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து தென்கரை போலீசார் தீபக் ரவிச்சந்திரனை கைது செய்தனர். காமராஜ் தப்பி ஓடி விட்டார். காமராஜ் மீது குற்றவழக்குகள் இருப்பதும், அவர் ரவுடி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவான அவரை தென்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணைக்கு சென்ற காவல்துறையினரை அரிவாளை காட்டி தலையை துண்டித்து விடுவேன் என மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.