காவிரி… மேகேதாட்டு அணையா(ல்) அரசியல் MGR முதல் MKS வரை!

மேகதாது என்கிற மேக்கேதாட்டு அதாவது ஆடு தாண்டும் பாறை என்கிற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் முயற்சிக்க. இதற்கு தமிழ்நாட்டு விவசாயிகளிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.…

மேகதாது என்கிற மேக்கேதாட்டு அதாவது ஆடு தாண்டும் பாறை என்கிற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் முயற்சிக்க. இதற்கு தமிழ்நாட்டு விவசாயிகளிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பதற்றம், எதிர்ப்பு ஏன்? விரிவாக பார்க்கலாம்…

சென்னை மாகாண அரசு – மைசூர் சமஸ்தானங்களுக்கு இடையிலான ஒப்பந்தம்.., தமிழ்நாடு – கர்நாடக மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைகள்…, காவிரி நடுவர் மன்றத்தின் (தீர்ப்பாயம்) தீர்ப்புகள்.., உச்சநீதி மன்றத்தின் உத்தரவுகள், இறுதி தீர்ப்பு என சற்றேறக்குறைய 150 ஆண்டு கால சட்ட, அரசியல் போராட்டங்களின் வரலாற்றைக் கொண்டது காவிரிப் நதி நீர்ப் பிரச்சினை. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு மட்டுமின்றி, தலைநகர் சென்னைக்கு குடிநீர் தரும் வீராணம் ஏரிக்கும் காவிரிதான் ஆதாரமாக இருக்கிறது. விவசாயம் மட்டுமின்றி சுமார் 30 மாவட்டங்களுக்கான குடி நீர் ஆதாரம் காவிரிதான்.

    கர்நாடகாவில் உயர்வு -தமிழ்நாட்டில் குறைவு

கடந்த 1970-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, காவிரியால் கர்நாடகத்தின் நீர்ப் பாசனப் பரப்பு சுமார் 7 லட்சம் ஏக்கர். தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் ஏக்கர் என்று இருந்தது. கர்நாடகாவில் படிப்படியாக கட்டப்பட்ட அணைகள், வெட்டப்பட பிரம்மாண்ட ஏரிகள் என பாசனப் பரப்பை விரிவாக்கி, தற்போது கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 25 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. ஆனால், தண்ணீர் தர மறுப்பு, நிறைவேறாத உத்தரவுகள் உள்ளிட்ட காரணங்களினால் தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பு சுமார் 20 லட்சம் ஏக்கருக்குள்ளாக குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாது தற்போதும் குறைந்தும் வருகிறது என்கிறார்கள் பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி ஆகிய கீழ்மடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த புதிய திட்டங்களையும் காவிரியில் மேற்கொள்ள முடியாது. ஆனால், இதை கர்நாடாகா பின்பற்றவில்லை என்கிறார்கள்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகள்

காவிரி நதிநீர் விவகாரத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு 1913ல் ஒரு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருந்தது என்கிறார்கள். காவிரியை முன் வைத்து இரு மாநிலங்களுக்கும் இடையில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டாலும் ஆண்டுக்கு 300 டிஎம்சிக்கு மேல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைத்து வந்தது. இந்நிலையில், மீண்டும் எழுந்த பெரும் பிரச்னையால், 1990ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதன் இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி, இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. இதில், தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி என்று உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் இடைக்காலத்தீர்ப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை மட்டும் சட்டப்பூர்வமாக 30 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு குறைந்தது. தீர்ப்பு பாதகமாக அமைந்தாலும் பிரச்னைக்கு சட்டப்பூர்வ தீர்வு கிடைத்துள்ளதாக விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர்.

எம்.ஜி.ஆர் முதல் எம்.கே.எஸ் வரை

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்த அடுத்த ஆண்டே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று மீண்டும் பேச ஆரம்பித்தது கர்நாடகம். காவிரியில் சவசமுத்திரம் அருகே கனகபுரா தொகுதியில் மேகேதாட்டு அணை கட்டப்பட வேண்டும் என்று 1980-ம் ஆண்டே கர்நாடகத்தில் முயற்சிக்கப்பட்டது. அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டின் எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. என்றாலும், மீண்டும் மீண்டும் அணை விவகாரத்தை கிளப்புகிறார்கள். குறிப்பாக ‘’இரு மாநில ஒப்பந்தம், நடுவர் மன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகள். சர்வதேச நதிநீர் பங்கீட்டு சட்ட விதிமுறைகளை எல்லாம் மீறி ஏற்கனவே பல அணைகளைக் கட்டி, பெருமளவு தண்ணீரைத் தடுத்து விட்டார்கள். வரும் மிச்ச சொச்ச தண்ணீரையும் இப்ப தடுக்கப் பார்க்கிறார்கள்’’ என்று தமிழ்நாட்டு விவசாயிகள் பதறுகிறார்கள்.

இங்கு மட்டுமல்ல….’’அணை கட்டினால் காவிரி ஆற்றுப் படுகையில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி அழிந்து, சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும். சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழ்கும்’’ என்றும் கர்நாடகாவில் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

நிலுவையில் உள்ள வழக்குகள்

தமிழ்நாட்டில் மட்டுமின்றி கர்நாடாகாவிலும் ஒருபக்கம் எதிர்ப்பு இருந்தாலும், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த அணை கட்டுவதில் முனைப்பு காட்டுவது மட்டும் நின்றபாடில்லை. இதை விவாதப் பொருளாகவே வைத்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கட்டு, காவிரி நதி நீர்ப்பங்கீடு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மாதவாரியாக கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் அளவு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான செயல் – விவசாயிகள் கண்டனம்

இதன்படி, கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், வழங்கியதோ 2.9 டிஎம்சிதான். எனவே ‘’ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள குறைந்த அளவு தண்ணீரும் கிடைக்காத நிலையில், குடிநீர் தேவை, மின் உற்பத்தி என தேவையற்ற காரணத்தைச் சொல்லி, அதையும் தடுக்கும் நோக்கில்தான் மேகேதாட்டு அணையைக் கட்ட முயற்சிக்கிறார்கள்’’ என்கிறார்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘’உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக மேகேதாட்டு அணை குறித்து கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் பேசி வருகிறார். ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் தரமாட்டோம் என்று பேசிவருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

காவிரி பிரச்னையில் காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒன்றுதன் என்கிறார்கள் விவசாயிகள் சங்க தலைவர்கள். இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதியும் வழக்குரைஞருமான ஜீவக்குமார் கூறுகையில், “காவிரியை கர்நாடகத்திற்குள்ளேயே கைது செய்து நிறுத்தும் மேகதாட்டு அணை திட்டத்திற்கான வரைவுத்திட்டத்தை உருவாக்கி மத்திய நீர்வளத்துறையின் அனுமதியும் பெற்றது பாஜக-வின் எஸ்.ஆர் பொம்மை அரசு. அந்த அரசுக்கு கர்நாடகத்தில் ஓட்டு சேகரித்த அண்ணாமலைக்கு, அதே பாதையில் அங்கு பயணிக்கும் இப்போதைய ஆட்சியை கண்டிப்பது, தூங்குபவன் தொடையில் கயிறு திரிப்பது ஆகும்” என்கிறார்.

தமிழ்நாட்டின் தொடர் சட்டப் போராட்டம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடல் என நீண்ட கால சட்ட, அரசியல் போராட்டங்களை தமிழ்நாடு நடத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேகேதாட்டு அணை கட்ட 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி, திட்ட அறிக்கை தயாரித்துள்ளது கர்நாடகா அரசு. இதற்கான முதல்கட்டப் பணிகளுக்கு கடந்த பாஜக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளனர்.

குறிப்பாக, 2018 நவம்பர் 22ம் தேதி மேகேதாட்டு அணைக்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதை எதிர்த்து, 2018 நவம்பர் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. தொடர்ந்து, ’’நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்புகள் குறித்து மனு, காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகே தாட்டு அணை குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும்..’’ . என தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

 அணை அல்ல அரசியல்

மேகேதாட்டு அணை விவகாரம் எழும் போதெல்லாம் , ‘’தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி அணை கட்டப்படாது’’ என்று மத்திய நீர்வளத்துறை சொல்கிறது. இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், தற்போது ‘’அணையை கட்டியே தீருவோம்’’ என்கிறார் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான சிவக்குமார். இவை இரண்டும் அரசியல் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

குறிப்பாக ‘’கர்நாடகத்தின் காவிரி ஆற்றுப் படுகைப் பகுதிகளான குடகு, மாண்டியா, மைசூர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மதச் சார்பற்ற ஜனதா தளம் வாக்கு வங்கி சார்ந்து செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் காங்கிரஸ் செல்வாக்கையும் பெருக்க சிவக்குமார் திட்டமிடுகிறார். (அவரது கனகபுரா தொகுதியில் அணை அமையும் பகுதியில்தான் வருகிறது.)தெனிந்தியாவில் பலமாக கால் ஊன்ற, இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறது பாஜக. ஆக, இரண்டு தேசிய கட்சிகளுக்கும் தேச ஒற்றுமை, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை விட வாக்கு வங்கி அரசியலே இலக்காக இருக்கிறது’’ என்கிறார்கள்.

’’காவிரியில் அற்ப அரசியல் நிற்கட்டும்… ஆற்றில் தண்ணீர் மட்டும் ஓடட்டும்’’ என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? எம்.ஜி.ஆர் தொடங்கி எம்.கே.ஸ்டாலின் வரை தொடரும் மேகேதாட்டு அணை விவகாரம் முடிவுக்கு வருமா? நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறைக்கு வருமா? அணையா(ல்) அரசியல் முடிவுக்கு வருமா..? காத்திருப்போம்…..

 

– ஜோ மகேஸ்வரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.