தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணியில் தொடர்வது குறித்தும் இடை தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். தேமுதிகவில் மொத்தம் 84 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,

தீர்மானம் 1:

தமிழக விவசாயிகளின் துயரத்தையும் கடன் சுமையையும் கருத்தில் கொண்டு, தகுதியான அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்டு, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான நீண்டகாலத் திட்டங்களையும் அரசு செயல்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 2:

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசின் அடிப்படைக் கடமையாகும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை வேரோடு அழிக்கவும், மதுபானப் பயன்பாட்டால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு உடனடியாகவும், கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 3:

தமிழக அரசு விவசாயிகளின் நெல்லை நேரடியாகவும், உரிய விலையிலும், தாமதமின்றியும் கொள்முதல் செய்து, அதற்கான தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும், அனைத்து பகுதிகளிலும் போதுமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, இடைத்தரகர்களின் தலையீட்டைத் தடுக்க வேண்டும். இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் – 4:

தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை இனியும் வேடிக்கை பார்க்காமல், உடனடியாக கட்டுப்படுத்தி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் – 5:

தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக மின் வெட்டைத் தடுத்து, தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 6:

காவேரி தண்ணீர் கடைமடை வரை சென்றடையவில்லை தூர் வாராததால் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஏரி, ஆறு கால்வாய் தூர்வாரப்பட வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் அமைத்து, தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் திட்டத்தை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் – 7:

தமிழக அரசின் திட்டங்கள் மக்கள் எதிர்ப்பு இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் திட்டங்களை தலைமைச் செயலகமாக இருந்தாலும் புதிய ஏர்போர்ட் ஆக இருந்தாலும் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் – 8:

காலங்களில் பண்டிகை அரசு போக்குவரத்து மக்கள் தேவைக்கேற்ப பேருந்துகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் தனியார் பேருந்துகள் கட்டணங்களையும் நிர்ணயம் செய்து கட்டணங்கள் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 9:

புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் கலைத்துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக 157 படங்களில் நடித்தவர். கலைஞர்களை சினிமாத்துறையில் உருவாக்கியவர். அரசியல் வாழ்க்கையில் நேர்மையாகவும், லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பாடுபட்டவர். எனவே மத்திய அரசு கேப்டன் அவர்களுக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.