ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் டிரைலரை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ’டியர்’ என்ற திரைப்படம் வரும் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் ’ரிபெல்’ மற்றும் ’கள்வன்’ ஆகிய இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் ’டியர்’ திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்ட ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று (ஏப். 5) மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் வெளியிடப் போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த ட்ரெய்லரில் இருக்கும் வாய்ஸ் ஓவர் கூட அஸ்வின் குரல் தான் என்றும் கூறப்பட்டது.
https://twitter.com/ashwinravi99/status/1776216464170864939
அதன்படி, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “டிரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சிறு பங்கு வகித்ததில் மகிழ்ச்சி. டிரைலரை பார்த்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த டிரைலர் வைரலாகி வருகிறது. மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் சூப்பர் ஹிட் குடும்பத் திரைப்படமாக கொண்டாடப்பட்ட “குட் நைட்” திரைப்படத்தின் ஒன்லைன் போல் இந்த திரைப்படமும் அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.







