ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது!

ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.

கடந்த 2024-ம் ஆண்டு கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு சில மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்தினார். ஆனால், கரூரில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், விஜய் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பு நடத்தினார். இதில் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, புதுச்சேரியில் கடந்த 9ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த நிலையில், ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரை இன்று மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.

இதற்காக, சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு சென்றடைந்தார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்றுக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனையொட்டி அங்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்தை சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.