ஆந்திராவில் லியோ திரைப்படத்திற்கு சிக்கல்! அக்.20-ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை!

ஆந்திராவில் லியோ திரைப்படத்தை 20-ம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ.  த்ரிஷா,  அர்ஜூன், …

ஆந்திராவில் லியோ திரைப்படத்தை 20-ம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ.  த்ரிஷா,  அர்ஜூன்,  சஞ்சய் தத்,  கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் அக்டோபர் 19 – ஆம் தேதி வெளியாக உள்ளது.  இதனிடையே படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,  கர்நாடகா,  கேரள மாநிலங்களில் அதிகாலை காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்டை மாநிலமான ஆந்திராவில் லியோ திரைப்படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தெலுங்கில் லியோ என்ற தலைப்பைப் பயன்படுத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் வகையில்,  ‘லியோ’ படத்தை தெலுங்கில் வெளியிட ஐதராபாத் நகர சிவில் நீதிமன்றம் அக்டோபர் 20-ம் தேதி வரை தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

மனு விவரம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்,  தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  இந்நிலையில், தெலுங்கு வெளியீடு தொடர்பான சர்ச்சையை நிவர்த்தி செய்வதாக தயாரிப்பாளர் நாக வம்சி உறுதியளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.