தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி சில்லரை விலை கடைகளில் ரூ.200 வரை விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் வெங்காயம் மற்றும் தக்காளி இன்றியமையாதது. தமிழ்நாட்டின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பூர்த்தி செய்தி வருகின்றன. நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தக்காளி வரத்து மேலும் குறைய தொடங்கியதால் விலை மேலும் எகிறத் தொடங்கி உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் சில்லறை வியாபாரிகள் 200 ரூபாய்க்கு விற்கின்றனர். நவீன தக்காளி (பெங்களூரு தக்காளி) சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் சில்லரை விற்பனையில் 200 ரூபாய் வரை தக்காளி விற்கப்படுகிறது.







