தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த குளம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

நங்கநல்லூர் தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் அல்ல எனவும், தீர்த்தவாரி நிகழ்ச்சி குறிந்து எந்த தகவலும் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர்…

நங்கநல்லூர் தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் அல்ல எனவும், தீர்த்தவாரி நிகழ்ச்சி குறிந்து எந்த தகவலும் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது தெப்பக்குளத்தில் நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறினார்.

மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான குளங்களையும், திருக்கோயில் நிகழ்ச்சிகள் நடைபெறும் குளங்களையும் உடனடியாக தூர்வார வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை பத்து லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதே கவன ஈர்ப்பு தீர்மானத்தில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, மமக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசினர்.

இதையும் படியுங்கள் : ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் – பூரண உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்

அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த தெப்பக்குளம், பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம் எனவும், திருக்கோயிலுக்கு சொந்தமான குளம் அல்ல எனவும் விளக்கமளித்தார். தர்மலிங்கேஸ்வரர் கோயிலை சங்கம் அமைத்து நிர்வாகிகளே நிர்வகித்து வருவதாகவும், கடந்த ஆண்டு துறையிடம் அனுமதி வழங்காமல் குடமுழக்கு நிகழ்ச்சி நடத்த முற்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதையும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் தன்னை அழைத்து கண்டித்ததாகவும் கூறினார். இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதே நேரத்தில் இது போன்று சங்கங்கள், நிகழ்ச்சிகளை நடத்தும்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.