கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி 42 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் 10- ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும்தான் . அதனால் ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் களத்தில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு திட்டங்களுக்காக வருகை தந்து பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறார். அதேபோல் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க, காங்கிரஸ் கட்சியும் பல்வேறு புது வியூகங்களை வகுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி சார்பில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிவாரணம், வேலையில்லா டிப்ளமோ படித்த நபர்களுக்கு மாதம் ரூ.1,500 நிவாரணம், காலிப் பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் 10 கிலோ இலவச அரிசி என அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி 124 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இப்பட்டியலில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களான தினேஷ் குண்டுராவ் காந்திநகர் தொகுதியிலும், டி.கே.சிவக்குமார் கனகபூரா தொகுதியிலும் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும் மற்றும் மல்லிகார்ஜுனா கார்கேவின் மகனான பிரியங் கார்கே சித்தாப்பூர் ரிசர்வ்டு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸ் கட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த 2-ஆம் கட்ட பட்டியலில் 42 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சமீபத்தில் பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைந்த பாபுராவ் சிசன்சூர் மற்றும் என்.ஒய் கோபால்கிருஷ்ணா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் இருவரும் குர்மித்கல் மற்றும் மொலகல்முரு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களை தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். மொத்தம் 166 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 58 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா