மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பாணர்ஜியுடன், கடந்த வாரம் வரை அரசியல் ரீதியாக மோதல் போக்கை கடைபிடித்து, பரபரப்பு செய்திகளில் இடம் பெற்ற முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவர் கடந்து வந்த அரசியல் பாதையை பற்றி பார்க்கலாம்.
காங்கிரசில் அரசியல் வாழ்வை தொடங்கி, ஜனதாவில் உச்சம் தொட்டு மத்திய அமைச்சராகி, பின்பு பாஜகவில் இணைந்து மாநில ஆளுநராகி, இப்போது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உயர்ந்துள்ளார் ஜெகதீப் தன்கர்.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஜெகதீப் தன்கர். 1951 ம் ஆண்டு மே 18 ம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். 1979 ல் ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இளம் வயது முதலே வழக்கறிஞர் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டார். நாற்பது ஆண்டு காலம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். உச்ச நீதமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராகவும் தன்கர் இருக்கிறார்.
முழு நேரமும் தொழில் முறை வழக்கறிஞராக இருந்த ஜெகதீப் தன்கர், ஜனதா கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பை வகித்தார். முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலை பின்பற்றி அரசியல் செயல்பாடுகளை வகுத்தார். 1989 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து, ஜனதா தளம் கட்சி சார்பில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
1990 ஆம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார் தன்கர்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது காங்கிரசில் இணைந்தார். 1993 ஆம் ஆண்டு கிஷன்கர் சட்டப்பேரவை தொகுதியில் வென்று, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார்.
ஜாட் சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்தவர், சில ஆண்டுகளுக்கு முன் பாஜவில் இணைந்தார். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு வங்க ஆளுநராக ஜெகதீப் தன்கர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது, முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், கடும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் – மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மோதல் என தலைப்பு செய்தியானது. இப்போது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் ஜெகதீப் தன்கர்.
-ரா.தங்கபாண்டியன்








