குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த ஜெகதீப் தன்கர். அவரது அரசியல் பின்னணி என்ன? என்று பார்ப்போம்.
நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சாசன பதவியான குடியரசு துணை தலைவர் பதவிக்கு பாஜக யாரை முன்நிறுத்தப்போகிறது என்கிற கேள்வி எழுந்தபோது, பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் பெயர் பரிசீலிக்கப்படுவதாக தகவல் எழுந்தது. அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்த பின்னர் அமிரீந்தர் சிங், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக களம் இறங்குவார் எனக் கூறப்பட்டது. அதன் பின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் யாரும் அதிகம் எதிர்பாராதவிதமாக மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக களம் இறக்கியுள்ளது. மேற்கு வங்க ஆளுநராவதற்கு முன்பு ஜெகதீப் தன்கருக்கு பல்வேறு அடையாளங்கள் இருந்தாலும் அந்த ஆளுநர் பதவியை வகித்த பிறகு, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடனான மோதல் மூலமாகவே ஜெகதீப் தன்கர் செய்திகளில் அதிகம் அறியப்பட்டு வருகிறார். அரசியலில் பலருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மம்தா பானர்ஜிக்கே சிம்மசொப்பனமாக விளங்குபவராக மேற்கு வங்க அரசியல்வாதிகளால் அறியப்படுகிறார் ஜெகதீப் தன்கார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன்ஜூனு மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் 1951ம் ஆண்டு மே மாதம் 18ந்தேதி பிறந்தார் ஜெகதீப் தன்கர். அம்மாநிலத்தில் உள்ள சித்தோர்காரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் பின்னர் ஜெய்ப்பூர் பல்கலைகழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு பயின்றார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஜெகதீப் தன்கர் பின்னர் அரசியலில் கால்பதித்தார். ஜனதா கட்சியில் சேர்ந்து ராஜஸ்தானில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
1989ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜூன்ஜூனு தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சந்திரசேகர் பிரதமர் ஆக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். நாடாளுமன்ற குழு தலைவராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. பின்னர் மாநில அரசியலுக்கு திரும்பிய அவர், 1993ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டுவரை ராஜஸ்தானின், கிஷன்கார் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 20ந்தேதி மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்றார் ஜெகதீப். ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய அவர் மாநில அரசின் நிர்வாகங்களில் வரம்பு மீறி தலைமையிடுவதாக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசால் விமர்சிக்கப்பட்டார். ஒருபுறம் மத்திய பாஜக அரசின் ஏஜென்ட் போல் செயல்பட்டு அரசியல் சாசன விதிமீறல்களில் ஈடுபடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வர மறுபுறம் அரசியல் சாசனத்தின் பாதுகாவலாராக மேற்கு வங்கத்தில் ஜெகதீப் தன்கர் திகழ்வதாக பாஜகவினர் புகழாரம் சூட்டினர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும், அம்மாநில முதலமைச்சர் மம்தாபானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற வன்முறைகளை தடுக்க மம்தா பானர்ஜி தவறியதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தானோ நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பிர்பூம் வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க மம்தா பானர்ஜி அரசு முயல்வதாக பகிரங்கமாக ஜெகதீப் தன்கர் எழுதிய கடிதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடிதம் மூலமாக மேற்குவங்க ஆளுநரும், அம்மாநில முதலமைச்சரும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே சென்றது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிவிட்டரிலும் இருவருக்கிடையே கடுமையான கருத்துமோதல்கள் நிகழ்ந்தன. ஒருகட்டத்தில் ஆளுநரின் டிவிட்டர் பதிவுகள் தனக்குவராத வகையில் அவரது டிவிட்டர் கணக்கை தனது டிவிட்டர் பக்கத்தில் ப்ளாக் செய்தார் மம்தாபானர்ஜி. ஜெகதீப் தன்கரை மேற்கு வங்க ஆளுநர் பதவியிலிருந்து மாற்றக்கோரி குடியரசு தலைவருக்கும் மனு கொடுத்தது திரிணாமுல் காங்கிரஸ்,.
இந்நிவையில் அவரை குடியரசு துணை தலைவர் தேர்தலில் களம் இறக்கி திரிணாமுல் காங்கிரசை அதிர்ச்சி அடையவைத்துள்ளது பாஜக. குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் மாநிலங்களவை தலைவராகவும் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் பலம் கணிசமாக உள்ள மாநிலங்களவையில் கடும் அமளிகள் ஏற்படும்போது அதனை சமாளித்து அவையை நடத்தும் திறன்வாய்ந்தராக ஜெகதீப் தன்கர் இருப்பார் என்பதாலும் அவரை குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பாஜக களம் இறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிக அளவு உள்ள ஜாட் சமூகத்தினரை கவரும் வகையில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீப் தன்கரை குடியரசு துணை தலைவராக்க பாஜக முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு அங்கு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர முறற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீப் தன்கரை குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-எஸ்.இலட்சுமணன்