“சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வீட்டிலிருந்தபடியே ஊழியர்கள் பணிபுரிய ஓராண்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்தினருக்கு அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யலாம்” என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அனுமதிப்பது குறித்து விதிமுறைகளை வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வர்த்தகத் துறையானது வீட்டில் இருந்தபடியே பணிபுரிவதற்கான புதிய விதி 43A ஐ சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006 இல் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் (SEZs) நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான வீட்டில் இருந்தபடியே பணி கொள்கைக்கான ஏற்பாட்டைச் செய்ய தொழில்துறை முன்வைத்த கோரிக்கை பேரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிய விதியானது, SEZ இல் குறிப்பிட்ட பிரிவில் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதிக்கிறது.
இவர்களில் IT/ITeS SEZ பிரிவுகளின் பணியாளர்களும் அடங்குவர்; அத்துடன், தற்காலிக ஊழியர்கள்; பயணம் செய்யும் மற்றும் வெளியூரில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர்.
மொத்த ஊழியர்களில் அதிகபட்சமாக 50 சதவீதத்தினரை வீட்டில் இருந்தவாறு பணிபுரிவதை அனுமதிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








