சென்னை சூளை கண்ணப்பர் திடல் பகுதியில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வரும் 200 குடும்பங்களின் வீட்டுக் கனவு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் அவலம் நிலவுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னை மாநகரின் வளர்ச்சிக்கான வரலாற்றில் மண்ணின் பூர்வீக குடிகளின் பங்கு முக்கியமானது. சென்னையில் தூய்மைப் பணி முதல் மிகப்பெரிய கட்டடங்களில் வண்ணம் பூசும் பணி வரை அனைத்து உடல் உழைப்புத் தொழில்களையும் சாலையோரம் வசிப்பவர்களே இரவு பகல் பாராது செய்து வருகின்றனர்.
இப்படியாக கடந்த 1994 ஆம் ஆண்டு வரை நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பு சென்னை சென்ட்ரல், ரிப்பன் மாளிகை, தற்போதுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கும் பகுதிகளை சுற்றி சாலையோரம் வசித்து வந்த மக்கள், விரைவில் அரசின் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியோடு சென்னை சூளை பகுதியில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
ஆனால், அந்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாததால் அங்கு வாழும் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கை பரிதாப நிலையில் உள்ளது. சுகாதாரம், தூய குடிநீர், கழிப்பிட வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
வீடற்றவர்களின் விடுதி என அழைக்கப்படும் கண்ணப்பர் திடல் பகுதி மக்கள், இதுவரை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தற்போதைய திமுக அரசு வீடுகள் விரைவில் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த உறுதிமொழியாவது செயல்வடிவம் பெற வேண்டும் என்பதே அவர்களுடைய ஏக்கமாக உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி எஞ்சிய காலமும் இப்படியே கடந்துவிடுமோ என அவர்கள் அஞ்சியுள்ளனர்.
சென்னை மாநகரின் பல்வேறு சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு தற்போதைய திமுக அரசால் வீடுகள் ஒதுக்கீடு செய்து தரும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கண்ணப்பர் திடல் பகுதியில் வாழும் 200 குடும்பங்களின் வீட்டுக்கான காத்திருப்பு கனவு நனவாக வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றி வைக்குமா?… பொறுத்திருந்து பார்க்கலாம்.
– நிஷாந்த், நியூஸ்7 தமிழ்.








