மதுரை தமுக்கம் மைதானத்தில் கண்கவர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா கோலாகலமாக நிறைவு பெற்றது.
தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ் பிரம்மாண்டமாக நடத்தியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவின் முதல் நாளிலேயே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்த நிலையில், 2வது நாளிலும் ”ஊரும் உணவும் திருவிழா” உற்சாகமாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சிலம்ப போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. தங்கள் திறமையை திறம்பட வெளிப்படுத்திய மாணவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்த தமிழ்நாடு சிலம்பாட்டக் குழுவினரை நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் சால்வை போர்த்தி கவுரவித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான உறியடி திருவிழா ஆண் பெண் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெற்றது. அன்றாட மனஅழுத்தங்களுக்கு மத்தியில் இத்தகைய போட்டிகள் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தங்கம் வெள்ளி நாணயங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசுகளை வழங்கி நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை ஆட்டம் போட வைத்தன. தொடர்ந்து நிறைவுரை ஆற்றிய நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல், மதுரை மக்களுக்கு நன்றி கூறினார். மேலும், மதுரை மக்கள் ஏமாற்றமாட்டார் என பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான இளவட்ட கல் தூக்குதல் என்பது விஞ்ஞானத்துடன் தொடர்புடையது என்றும் கூறினார்.
மேலும், நடந்து முடிந்த சித்திரை திருவிழாவின் போது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் 50க்கும் மேற்பட்ட குழுவினர் இருந்து அதனை ஒளிபரப்பு செய்தனர். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் நியூஸ் 7 தமிழ் பக்தி சேனல் வழியாக அழகரை கண்டுகளித்தனர் என்று கூறினார். அந்த நம்பிக்கையை தற்போதும் மதுரை மக்கள் காப்பாற்றியுள்ளனர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அமோக ஆதரவு வழங்கிய மதுரை மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பாரம்பரிய உணவுப் பொருட்கள், விளையாட்டுகள் என கரை புரண்டோடிய உற்சாகத்துடன் அரங்கேறிய ஊரும் உணவும் திருவிழாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். இதுபோன்ற திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே விழாவிற்கு வந்த மக்களின் பெரும் விருப்பமாக உள்ளது.








