”இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வெளிக்காட்டுபவர்” என நடிகர் ஃபகத் பாசிலுக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ஃபகத் பாசில் தனது 41வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பூவே பூச்சூடவா, வருஷம் 16, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட படங்களை இயக்கிய பாசிலின் மகன்தான் ஃபகத் பாசில்.
மலையாள சினிமாவில் ”கையேதும் தூரத் “ எனும் படத்தின் மூலம் அறிமுகமான ஃபகத் பாசில் பெங்களூர் டேஸ், கும்பலாங்கி நைட்ஸ், மஹேஷின்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனது தனித்துவமான நடிப்பின் மூலமும், காத்திரமான கண் அசைவுகளின் மூலம் மலையாள சினிமா மட்டுமல்ல தென் இந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை அவர் கொண்டுள்ளார்.
தமிழில் ஃபகத் பாசில் சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எதிர்மறையான ரத்னவேலு கதாபாத்திரத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ் ஃபகத் பாசிலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது..
”வணக்கம் பகத் சார்!!!
உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்து தான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச் சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர் அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்..” என மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/mari_selvaraj/status/1688778466664349696







