நடிகர் விக்ரம் நடித்து வெளியாகவுள்ள தங்கலான் படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 61வது படத்திற்கு “தங்கலான்” என பெயரிட்டுள்ளனர்.
கோலார் தங்க சுரங்கத்தினை மையமாக வைத்து கதைக் களம் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனர் ஞானவேல் ராஜா மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகும். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தங்கலான் என்றால் ஊர்க்காவல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பற்றிதான் இந்த படம் பேசுகிறது என டீசர் வெளியானபோது சினிமா விமர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பின் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், முதல் முறையாக விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படத்தில் இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பை விக்ரமின் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரையும் தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் படி நாளை காலை சரியாக 09:05 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







