தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், பாமக நிறுவனர் ராமதாசுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகம் ஏற்றம் இறக்கமாக நீடித்து கொண்டிருக்கிறது. இதனால் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அவர் டிவிட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார். மேலும் மக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாசுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த தனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
– இரா.நம்பிராஜன்








