வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்திப்பதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது என தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுக விமர்சனம் செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும், நாளையும் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக சாலை மார்க்கமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வருகை தந்தார். ஒரு வார பயணமாக உதகைக்கு வருகை புரிந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 9ம் தேதி வரை உதகை ஆளுநர் மாளிகையில் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் 28 துணைவேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் உதகையில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என். ரவி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாவது..
” தமிழ்நாட்டின் இளைஞர்கள் பட்டப்படிப்புக்கு ஏற்ற வேலையின்றி தவிக்கின்றனர். பொறியியல் மாணவர்களை விட பாலிடெக்னிக் பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை அதிகளவில் பெறுவது முரண்பாடாக உள்ளது.
கல்லூரிகளில் பாடம் எடுக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கு தினக்கூலி போல மாதத்திற்கு 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு நல்ல நிலையில் இருந்தாலும் தொடர் சரிவையும் சந்தித்து வருகிறோம்.
தேவைக்கேற்ப கல்வியை நம்மால் வழங்க முடியாத சூழல் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் தேசிய கல்வி கொள்கை.
அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கற்க ஆங்கிலம் முக்கியம் என்ற நம்பிக்கை நம் ஆழ் மனதில் பதியும் அளவிற்கு ஆங்கிலத்திற்கு நாம் அடிமையாகிவிட்டோம். இந்த எண்ணம் அடியோடு மாற வேண்டும். இளைஞர்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கினால் இளைஞர்களின் தடுமாற்றத்தை முறியடிக்கலாம்.
தமிழில் வழங்கும் கல்வி மனித ஆற்றலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். பெரிய ஜாம்பாவான்கள் தனது உற்பத்தியை சீனாவில் இருந்து மாற்றி மாற்ற நாடுகளில் உற்பத்தி செய்ய தேடி வருகின்றனர். நாம் கேட்பதாலோ, அவர்களுடன் பேசுவதாலோ, முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள்
உலகளவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே அதற்கு சிறந்த வழி “ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் , ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ள நிலையில் ஆளுநர் மறைமுகமாக இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







