குழந்தை உயிரிழப்பு – முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கும் தாய்

நூடுல்ஸ் உணவை சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சிறுவனின் தாயிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட்…

நூடுல்ஸ் உணவை சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சிறுவனின் தாயிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி மருதமுத்து நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 34). பொக்லைன் டிரைவரான இவருக்கு திருமணமாகி, மகாலெட்சுமி என்ற மனைவியும், பெண் குழந்தை ஒன்றும், 2 வயதில் சாய் தருண் என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளனர்.

 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலெட்சுமி, நூடுல்ஸ் செய்து சாய் தருணிற்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள நூடுல்ஸை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலை, அந்த நூடுல்ஸை எடுத்து மீண்டும் சாப்பிட சாய் தருணுக்கு கொடுத்துள்ளார். அதன்பின் எதுவும் சாப்பிடாத சாய் தருண், உடல் சோர்வாக காணப்பட்டுள்ளான்.

 

பின்னர் அன்று மாலை திடீரென அவன் மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி, சாய் தருணை தூக்கிக்கொண்டு, நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

 

இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பல்வேறு கோணத்தில் அவர்கள் நடத்திய விசாரணையில், நூடுல்ஸ் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழக்க வாய்ப்பு இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

இதையடுத்து, சாய் தருணின் தாய் மகாலெட்சுமியிடம் காவல்துறையினர் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். முதலில் நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்ததாக தெரிவித்த அவர், குழந்தையை கையில் வைத்திருந்தபோது, அவன் மயங்கி விழுந்ததாகவும் அதனால் காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

சிறுவனின் தாய் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்து வருவதாக கூறியுள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின்னே சாய் தருணின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் கூறினர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.