திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சியில் 2 வயது சிறுவன் சாய் தருண் நேற்று (ஜூன் 19) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த உயிரிழப்புக்கு நூடுல்ஸ் காரணமல்ல என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று அதற்கு முந்தைய நாள் சமைத்த நூடுல்சை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து அதை சூடுபடுத்தி காலையில் குழந்தைக்கு கொடுத்துள்ளார் சிறுவனின் தாய். இதனால் மாலை வரை உடல் சோர்வுடன் காணப்பட்ட குழந்தை திடீரென மயங்கி விழுந்து இறந்தது. ஏற்கனவே ஒவ்வாமை காரணமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை கொடுத்ததால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு குழந்தை இறந்திருக்கலாம் என தகவல் தீயென பரவியது.
இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு நேரில் விசாரணை நடத்தினர். குழந்தையின் உடல்நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிகிச்சை ஏதும் எடுத்துக் கொண்டுள்ளாரா? நூடுல்ஸ் உணவை குழந்தையின் தாயார் எப்போது சமைத்தார்? எந்த அளவிற்கு உணவு கெட்டு போய் இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்? போன்ற கோணங்களில் விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஒருபுறம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் மற்றொரு புறம் குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெற்றோர்களிடம் காவல்துறையினரும் விசாரணை செய்தனர்.
முன்னதாக இதில் குழந்தையின் இடது காலில் காயம் இருப்பதோடு விலா எலும்பில் முறிவு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்திருந்தனர். இது குறித்து குழந்தை கீழே விழுந்து காயம் ஏதும் ஏற்பட்டதா? அல்லது நடந்தது என்ன என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை முடிவில், முதல்நாள் சமைத்த நூடுல்சை குழந்தைக்கு அளித்ததால் குழந்தை இறக்கவில்லை என்றும் ஏற்கனவே வேறு சில ஒவ்வாமை போன்ற நோய்கள் இருந்துள்ள காரணத்தினாலேயே குழந்தை உயிரிழந்துள்ளது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








