திருவொற்றியூர்: நிவாரணத் தொகையை வழங்கினார் அமைச்சர்

திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழந்த விபத்தில் உடமைகளை இழந்த மக்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். சென்னை திருவொற்றியூர் அரிவாளக்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சேதமடைந்த நிலையில்…

திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழந்த விபத்தில் உடமைகளை இழந்த மக்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

சென்னை திருவொற்றியூர் அரிவாளக்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. நேற்று குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டதால் அங்கு வசித்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை அங்கு ஏற்பட்ட விரிசல் அதிகமாகி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. மக்கள் முன்கூட்டியே வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால், அங்கு வசித்த மக்கள் தங்களது உடமைகளை இழந்து தங்களது வீடு இருந்த இடத்தை பார்த்து கதறி அழுதனர்.

இந்நிலையில், வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்த 24 குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் மற்றும் மாற்று வீடுகள் உடனடியாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து வீடுகளை இழந்த 28 குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் தா.மா.அன்பரசன் வழங்கினார்.

திருவொற்றியூரில் இடிந்து விழுந்த குடியிருப்புகள்

உடமைகளை இழந்த மக்கள் தற்பொழுது திருவொற்றியூர் வடக்கு மாட தேர் வீதியில் உள்ள டி.கே.பி சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான பாய், தலையணை, போர்வை, தட்டு,கோப்பை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகர் எம்பி கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ கே பி பி சங்கர், எம்எல்ஏ சுதர்சனம் பங்கேற்று பொருட்களை வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.