அச்சுறுத்தும் ”அரிகொம்பன்” யானை : ரசிகர் மன்றம் முதல் சினிமா வரை பிரபலமானது எப்படி.? – முழு விபரம்

அரிசி யானை என்ற பொருள் கொண்ட அரிக்கொம்பன் யானையைப் பற்றிய விபரங்களை விரிவாக காணலாம். அரிக்கொம்பன் என்ற பெயர் மலையாள வார்த்தைகளைன் கலவையாகும். மலையாளத்தில்  “அரி” என்ற சொல்லுக்கு  அரிசி என்றும்  “கொம்பன்” என்பதற்கு …

அரிசி யானை என்ற பொருள் கொண்ட அரிக்கொம்பன் யானையைப் பற்றிய விபரங்களை விரிவாக காணலாம்.

அரிக்கொம்பன் என்ற பெயர் மலையாள வார்த்தைகளைன் கலவையாகும். மலையாளத்தில்  “அரி” என்ற சொல்லுக்கு  அரிசி என்றும்  “கொம்பன்” என்பதற்கு  யானை என்றும் பொருள்படும்.

அரிக்கொம்பன் யானை மூணாறில் உள்ள சின்னக்கானல் பகுதியில் அரிசிக்காக உள்ளூர் வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி அரிசியை தின்று செல்லும் வழக்கம் கொண்டது. இந்த யானை மூணாறில் சுற்றியுள்ள சின்னக்கானல், சாந்தன்பாறை, சூரியநெல்லி ஆகிய பகுதிகளில் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. மேலும் பலரை காயப்படுத்தி உள்ளது. யானை தாக்கி இறந்தவர்களில் 15 பேர் தமிழர்கள்.

35 வயது மதிக்கதக்க இந்த அரிக்கொம்பன் யானை, 2010 களின் முற்பகுதியில்
சின்னக்கானலில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வன்முறையை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இந்த அரிக்கொம்பன் யானை  ரேஷன் கடைகள், வீட்டு சமையல் அறைகள் மற்றும் மளிகை கடைகளில்
புகுந்து அரிசியை உண்பது வழக்கமாக கொண்டுள்ளது.

பன்னியர் தோட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையை இந்த அரிக்கொம்பன் ஓராண்டில் மட்டும் 9 முறை தாக்கி தகர்த்துள்ளது. ஒருவேளை ரேஷன் கடையில் அரிசி இல்லையென்றால் அருகில் இருக்கும் வீடுகளில் சமயலறையை இடித்து அரிசியை தின்றுவிட்டு செல்லும். கடந்த 2005 முதல் 400க்கும் மேற்பட்ட ’கட்டடங்களை’  தாக்கி தகர்த்துள்ளது.

அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர்  பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் வலியுறுத்தி பொது மக்கள் நடத்திய போராட்டம் நடத்தினர். இதனால  கடந்த 2017 ஆம் ஆண்டு பூப்பாறை அருகில் வனத்துறையினர் யானையை பிடிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, ஏழு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் அரிக்கொம்பன் யானை மற்ற யானைகளை விட மிக திடகாத்திரமாக இருந்ததால் 7 மயக்க ஊசிகளையும் தாங்கி சின்னகானல் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

தொடர்ந்து அங்கிருந்த யானை சக்ககொம்பன் மற்றும் மொட்டவாலன் ஆகிய யானைகளுடன் சேர்ந்து சின்னக்கானல், சூரியநெல்லி, பூப்பாறை ஆகிய இடங்களில் தனது வழக்கமான செயல்களில் ஈடுபட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன், அச்சத்துடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் அரிக்கொம்பன் யானை தொடர்பான வழக்கில், ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அரிக்கொம்பனை பிடித்து விடுவதற்கான மாற்று இடத்தை வனத்துறையினர் நீதிமன்றத்தில் கூறிய நிலையில் அந்த இடம் எது என்பது பகிரங்கமாக தெரிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது.

கடந்த மாதம் 29ஆம் தேதி டாக்டர் அருண் சக்காரியா தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக அரிக்கொம்பனை சின்னக்கானலில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு மாநில எல்லை பகுதியான மங்கள தேவி கண்ணகி கோவில் வனப்பகுதியில் கேரள வனத்துறையால் அரிக்கொம்பன் யானை விடப்பட்டது. அதனை கண்காணிக்க யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது

பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த யானை தேனி மாவட்டம் கம்பம் நகரில் பால்ராஜ் என்பவரை தாக்கியதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் தொடச்சியாக சுருளிப்பட்டி அருகே அரிக்கொம்பன் யானை விவசாய நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் கம்பம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகள், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிகள், கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி முழுமைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிக்கொம்பன் பெயரில் யானைக்கு கேரளாவில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த யானையின் கதையை மையமாக வைத்து ‘அரிகொம்பன்’ என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தை  சஜித் யாஹியா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.