இலங்கை அதிபரும் பிரதமரும் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நாளை மாபெரும் பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 2 மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அவர் பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்று ஏறக்குறைய 2 மாதங்கள் ஆகின்றன. எனினும், இலங்கையில் நிலைமை சீரடையவில்லை. மாறாக, மேலும் மோசடைந்து வருகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால், அந்நாட்டில் தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. மக்களின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்வதில் அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை கிடைக்காததாலும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் மாநாளை பெரும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதிபர் மாளிகை அருகில் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள எண்ணெய் நிறுவனமான லங்கன் இந்தியன் ஆயில் கார்பரேஷன், தனது விநியோகத்தை இன்றும் நாளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. லங்கன் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இரு சக்கர வாகனங்கள், தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லங்கன் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் இந்த அறிவிப்பு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.












