தமது வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை 15 மணி நேரத்திற்கு பின்னர் நிறைவு பெற்றது. இதேபோல் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் காமராஜ்
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையும் நிறைவடைந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காமராஜ், இந்த சோதனை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் சாடினார்.இதை சட்ட ரீதியாக தாம் எதிர்கொள்வேன் என்றும் அவர் கூறினார். லஞ்சஒழிப்புத்துறை சோதனைகள் மூலம் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை முடக்கி விடலாம் என திமுக நினைப்பதாக கூறிய காமராஜ், அது ஒரு
போதும் நடக்காது என்றும் சூளுரைத்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மற்ற கட்சிகள் மறக்கப்பட்டு அதிமுக மட்டுமே பேசும் பொருளாக உள்ளதாகவும் அவர் கூறினார்,
அதிமுகவில் ஒற்றை தலைமை வந்தால் பல்வேறு கட்சிகள் ஆட்டம் காணும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் காமராஜ், அதன் காரணமாகவே இது போன்ற நடவடிக்கைகளை திமுக மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார். தம்முடைய வீட்டில் நடைபெற்ற லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறிய காமராஜ், தாம் முறைகேடு செய்ததாக கூறும் தொகையைவிட அதிகமாக கடன்தான் தமக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை வெளியிடுவோம் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ், எச்சரித்துள்ளது குறித்து கேட்டபோது, சொன்னவர்கள் ஒன்றும் நேர்மையானவர்கள் அல்ல என கமராஜ் கூறினார். ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.







