திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் மனித வெடிகுண்டாக மாறப்போவதாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 23-ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மனித வெடிகுண்டு என்றும், திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்க போவதாகவும் மேலும் தகாத வார்த்தைகளை கூறி வசைபாடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் திருச்சி ரயில்வே சந்திப்பு முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் எந்த விதமான அறிகுறியும் இல்லை. இதையடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் துரித விசாரணைக்கு தனிப்படை அமைத்து விசாரணை செய்ய அறிவுறுத்தினார்.
விசாரணையில், காவல்துறை அலுவலகத்தின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டவர் குறித்து விசாரணை நடத்தியபோது, அவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவள்ளூர நகரை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது.
பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவரை பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த செயலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
– இரா.நம்பிராஜன்








