டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மதுரை பாந்தர்ஸ் அணியை லைகா கோவை கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணி இந்தப் போட்டித் தொடரில் இருந்து வெளியேறியது.
டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் அருண் கார்த்திக் 47 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வர், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, லைகா கோவை கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடத் தெடாங்கியது. 9.5 ஓவர்களில் அந்த அணி 72 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜு 40 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
அப்போது மழை பெய்தது. நீண்ட நேரமாக மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
முதலாவது தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நெல்லை அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு செல்லும். தோற்கும் அணி இரண்டாவது தகுதிச்சுற்றில் கோவை அணியுடன் மோதும்.








