சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த பாடியநல்லூர் காமராஜர் நகர் பகுதியை…

தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த பாடியநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவி ஒருவர் தனது பெரியம்மா வீட்டில் வளர்ந்தார். இவருக்கு பெற்றோர்கள் இல்லை. சில நாட்களுக்கு முன் பெரியம்மாவிடம் இருந்து தன்னை பிரித்து காப்பகத்தில் சேர்க்குமாறு செங்குன்றம் காவல் நிலையத்தில் மாணவி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

செங்குன்றம் காவல் நிலையம் இந்த புகாரை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றிய பிறகு சிறுமியின் பாதுகாப்பை கருதி அம்பத்தூர் மகளிர் போலீசார் திருநின்றவூர் அடுத்த பாக்கம் அருகே உள்ள சேவாலயா காப்பகத்தில் சிறுமியை சேர்த்தனர். சிறுமிக்கு 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகின்ற நிலையில் பெண் காவலர் ஒருவருடன் தேர்வு எழுத பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற ஆங்கில தேர்வுக்கு வழக்கம்போல் பெண் காவலர் மாணவியை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றார். தேர்வு முடிந்ததும் மாணவி பள்ளியை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெண் காவலர் பள்ளியில் தேடிவிட்டு மாணவி இல்லாத காரணத்தினால் ஆசிரியர்களிடம் விசாரித்தார். அப்போது அவர் தேர்வு எழுத பள்ளிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர்.

பின்னர் சந்தேகமடைந்த போலீசார் சிறுமியின் பெரியம்மாவை அழைத்து தீவிர விசாரித்தபோது சிறுமி அதே பகுதியை சேர்ந்த துரைமுருகன் என்பவரை காதலித்து வந்ததாக கூறியுள்ளார். தலைமறைவாக இருந்த துரைமுருகனை கைது செய்த செங்குன்றம் போலீசார் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளிக்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று போரூரில் உள்ள ஒரு சிறிய கோவிலில் தாலி கட்டிய பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் பல்வேறு மாவட்டங்களில் சுற்றி வந்தாகவும்,  பின்னர் கீரனூர் என்ற கிராமத்தில் இறங்கி தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறி ஒரு வீடு எடுத்து தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அன்றிரவு சிறுமியின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரத்தில் துரைமுருகன் ஈடுபட்டதாகவும், சிறுமி தன்னை மீண்டும் சென்னைக்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தியதையடுத்து சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் சிறுமியையும் அழைத்து வந்து விசாரித்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துரைமுருகன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.