இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைக்க காரணமாக இருந்த கபில்தேவின் பிறந்த நாள் இன்று. கிரிக்கெட் உலகில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
1983 ஜூன் 18ம் தேதி உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்ததால், ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறி விட்டதாகவே பார்க்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தபோது, கையில் வாளேந்தி போர்க்களம் புகும் வீரரை போன்று களமிறங்கினார் கேப்டன் கபில் தேவ்.
தொடக்கம் முதலே பவுண்டரி மழை பொழியத் தொடங்கிய அவர், 138 பந்துகளில் 175 ரன்கள் விளாசி மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பந்து வீச்சிலும் 1 விக்கெட்டை வீழ்த்திய அவரே அன்றைய ஆட்டநாயகன்.
பிபிசி ஊழியர்கள் அன்றைய தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், கபில்தேவ் ருத்ர தாண்டவம் ஆடிய காட்சிகளை படம் பிடிக்க கேமராக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அடுத்தடுத்த வெற்றிகளால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, 2 முறை உலகக்கோப்பை வென்று சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள் அணியை மண்ணைக் கவ்வச் செய்து மகுடம் சூடியது.1959-ம் ஆண்டு சண்டிகரில் பிறந்தவர் கபில் தேவ். 1975-ம் ஆண்டில் ஹரியானா அணிக்காக களமிறங்கி தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அடுத்த 3 ஆண்டுகளிலேயே சர்வதேச போட்டிகளில் கால் பதித்த அவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய இரண்டிலும் எதிர்கொண்ட முதல் அணி பாகிஸ்தான். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய ஆல்ரவுண்டரான கபில் தேவ், இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்தபோது அவருக்கு வயது 24.
131 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 5 ஆயிரத்து 248 ரன்கள் அடித்ததுடன் மட்டுமின்றி 434 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதேபோல், 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 783 ரன்கள் மற்றும் 253 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அந்த ஜாம்பவான்.தனித்துவம் வாய்ந்த ஆட்டத்திறனால் இந்திய கிரிக்கெட்டில் கோலாச்சி மக்கள் மனதில் நீங்காத புகழை பெற்ற அவர், 1994-ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
கிரிக்கெட்டை அவர் விட்டாலும், கிரிக்கெட் அவரை விடவில்லை. 1999-ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டார். தனது அனுபவங்களால் இந்திய அணியை திறம்பட வழிநடத்திய அவர், தற்போதும் வர்ணனையாளராக கிரிக்கெட் மீதான தனது காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
கிரிக்கெட்டை இந்தியர்கள் அதிகம் விரும்பி பார்ப்பதற்கு விதை போட்ட நிகழ்வு 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை. கபில் தேவ் தலைமையில் இந்திய அணி சரித்திரம் படைத்த அந்த நிகழ்வு 83 என்ற பெயரில் திரைப்படமானது.இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார் ரன்வீர் சிங். மேலும், நடிகை தீபிகா படுகோன், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம், உலகக்கோப்பையை வென்ற தருணங்களை அப்படியே காட்சிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தனித்திறமைகளால் முத்திரை பதித்து கபில் தேவ் நிகழ்த்திய அற்புதங்கள், ஆண்டுகள் கடந்தாலும் இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருப்பதாக கூறினால் யாரும் மறுப்பதற்கில்லை.
- தென்றல் பிரபாகரன், நியூஸ் 7 தமிழ்