நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்! பயிரை அறுவடை செய்யும் வரை காத்திருக்க முடியாதா எனவும் கேள்வி!

நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. என்.எல்சி நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான…

நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

என்.எல்சி நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, என்எல்சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும்,
காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஆகஸ்ட் 3-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

இதனிடையே என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பத்தாண்டுகளுக்கு முன்பே இழப்பீடு கொடுக்கப்பட்ட நிலையில், நிலத்தை கையகப்படுத்த நில உரிமையாளர்கள் எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தண்டபாணி, பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என கேள்வி எழுப்பினார். பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்த்தபோது அழுகை வந்ததாக வேதனை தெரிவித்த நீதிபதி, நிலத்தை எடுக்க ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்படுகிறது என என்எல்சி கூறுவதை சுட்டிக்காட்டி, எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினாலும் பணத்தை வைத்து விவசாயி என்ன செய்வார் என்றும் நீதிபதி தண்டபாணி கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.