போராட்டங்கள் அறவழியில் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களை அச்சுறுத்தி நிலங்களை எடுக்கும் என்எல்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து, அன்புமணி தலைமையில் பாமகவினர் ஏராளமானோர் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அன்புமணி உள்ளிட்டோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அன்புமணி கைது செய்யப்பட்ட போது போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், மாலை 6 மணி அளவில் என்எல்சி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களமாக காட்சியளித்தது. இதனிடையே, கலவரம் நடைபெற்ற இடத்தை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐஜி கண்ணன், “போராட்டங்கள் அறவழியில் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.







