இணைப்பு மொழியாக ஆங்கிலம்: ஓபிஎஸ்

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டது…

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டுமென இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்தும் பரவலாக பகிரப்பட்டது.

இந்த நிலையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, ஆற்காடு சாலையில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இந்தி மொழி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்திற்கு, ஆங்கிலம் தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.