“கரூர் சம்பவம் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது” – நடிகர் தாடி பாலாஜி பேட்டி

கரூர் சம்பவம் தவெக தலைவர் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது என நடிகர் தாடி பாலாஜி தெரிவித்தார். 

கரூரில் கடந்த  27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், நடிகர் தாடி பாலாஜி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தவெக தலைவர் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. அவர் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். விஜய் இந்த சம்பவம் குறித்து பேசினால், அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். விரைவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து, கரூர் சம்பவம் தொடர்பான பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். தலைமைக்கும், தலைவருக்கும் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்களே பதவிகளுக்கு வர வேண்டும். பதவியை பெற்றுக்கொண்டு செயல்படாமல் இருக்கக் கூடாது, உண்மையாக உழைக்க வேண்டும்”

இவ்வாறு நடிகர் தாடி பாலாஜி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.