கோவை காந்திபுரத்தில், கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுக் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் மேலும் பல தரவுகளையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் அரசாணையும் வெளியிடப்பட்டது; அக்குழுவில், இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் என்றும், கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது; ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் என்றும், கடந்த திமுக ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் திமுக என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது என்றும் விமர்சித்தார்.
இந்த நிலையில் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது.
விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை.
ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர்.
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான்.
அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?
கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர்.
திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




