மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டி புனித அந்தோணியர் பொங்கல் விழாவினை முன்னிட்டு, புனித சூசையப்பர் பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது . சுமார் 700 காளைகளும், 300 காளையர்களும் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியினைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குளத்தூராம்பட்டியில் புனித அந்தோணியர் பொங்கல் விழாவினை முன்னிட்டு, புனித சூசையப்பர் பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க, வீரர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். சுமார் 700 காளைகளும், 300 காளையர்களும் பங்கேற்ற இப்போட்டியை அமைச்சர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பங்கு தந்தை ஆரோக்கிய பன்னீர் செல்வம் சிறப்பு பிராத்தனைக்குப் பின் அவிழ்க்கப்பட்ட உள்ளூர் கோயில் காளைகளைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டது. வாடிவாசலில் சீறி பாய்ந்த காளைகளைக் காளையர்கள் திமில் பிடித்து தழுவினர்.
அதில் சில காளைகள், காளையர்களின் பிடியில் சிக்காமல் ஆடிகளத்தில் நழுவி சென்றது. மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும், வீரர்களின் கைகளில் சிக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம், சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் என பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியினைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே ராஜாபட்டி, மாசிமலை கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், பீரோ, கட்டில், சோபா உள்பட ஏராளமான பரிசுப் பொருட்கள்
வழங்கப்பட்டன.
வழங்கப்பட்டன.
* சௌம்யா.மோ








