தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு காரணமானவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூஸ் 7 தமிழுக்கு பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம்.
ஒட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிகெட், கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், செஸ், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹாக்கி,கபடி, துப்பாக்கி சூடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்களில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதிப்பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
தேசிய அளவிளான இந்தபோட்டிகளில் அவர்கள் பெறும் பதக்கங்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். உயர்கல்வி படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் சேர்வதற்கு தங்கப்பதக்கம் வென்றால் 190 மதிப்பெண், வெள்ளிப்பதக்கம் வென்றால் 160 மதிப்பெண், வெண்கலப்பதக்கம் வென்றால் 130 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொண்டாலே 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப தேசிய விளையாட்டு கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பும். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதன்மை உடற்கல்வி இயக்குநர் விளையாட்டு வீரர்களை தேர்வுச் செய்து பட்டியலை அனுப்பி வைப்பார்.
அந்த வகையில் இந்த ஆண்டு 247 மாணவர்களை தேர்வு செய்து மே 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான கடிதம் கடந்த மே 11 ஆம் தேதி லக்னோவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறித்த கடிதம் முறையாக சென்று சேரவில்லை. தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு அதற்கான நிதியும் முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் சேரும் பொழுது விளையாட்டு பிரிவு தரவரிசையின் கீழ் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தற்போது இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காத சூழல் காரணமாக விளையாட்டு பிரிவில் மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பினை அவர்கள் இழந்துள்ளனர். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழ்நாடு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி குறித்து நியூஸ் 7 தமிழின் அறச்சீற்றம் நிகழ்ச்சியின் வாயிலாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் அறச்சீற்றம் நிகழ்ச்சியின் எதிரொலியாக தவறு செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.







