உடுமலை வனச்சரக மலை கிராமத்தில் காலில் வெட்டுக்காயம் அடைந்தவர் மருத்துவ வசதி இல்லாததால் தொட்டில் கட்டி சென்று உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. 3000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் குறிப்பாக குருமலை, மேல்குருமலை, குளிப்பட்டி, உள்ளிட்ட மலை கிராம மக்கள் வனவிலங்குகள் தாக்கி காயம் அடைந்தாலோ அல்லது கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டுமென்றால் தொட்டில் கட்டி உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வழக்கம். தொட்டில் கட்டி தூக்கி வர முடியாத சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு.
இந்நிலையில், நேற்று மாலை குருமலையை சேர்ந்த சடையன் (19) என்ற இளைஞர் வீட்டிற்கு விறகு வெட்ட சென்றுள்ளார் அப்போது தவறி அரிவாள் அவரது காலில் வெட்டியதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். இயற்கை மூலிகை செடிகள் அரைத்து முதியவர்கள் சிகிச்சை அளித்தும் ரத்தம் நிற்காததால் வேறு வழியின்றி இரவு 7 மணிக்கு குறுமலையில் இருந்து அடர்ந்த வனப் பகுதியில் வனவிலங்குகளை பற்றி கூட கவலைப்படாமல் தொட்டில் கட்டி சென்று உடுமலை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அனுமதித்துள்ளனர்.அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மலைவாழ் மக்கள் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் விரைந்து வந்து மருத்துவ வசதி பெற முடியாத அவலம் தொடர்ந்து வருகிறது ஆள் நடமாட்டமே இல்லாத வனப்பகுதிகளுக்குள் சாலை அமைக்கும் மத்திய மாநில அரசுகள் பழங்குடிகள் வாழும் மலை கிராமத்திற்கு சாலை அமைக்க தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வாழும் ஒட்டு மொத்த மலைவாழ் மக்களின் ஒரே
கோரிக்கை 2006 வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த
வேண்டும் அப்போதுதான் தங்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கும் என்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன் பழனிச்சாமி என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் தொட்டில் கட்டி உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தது கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







