உலகளவில் இசைத் துறையில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்றான கிராமி விருதுகளை 3 முறை வென்று அசத்திய இந்தியர் ஒருவரைக் குறித்து விரிவாக காணலாம்.
மூன்று கிராமி விருதுகளை வென்று, உலக திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் இந்திய இசையமைப்பாளர் ஒருவர். ‘கிராமி விருதுகள்’ இசைத்துறையில் “சிறந்த” சாதனைகளை அங்கீகரிப்பதற்காக அமெரிக்காவின் ரெக்கார்டிங் அகாடமியால் வழங்கப்படுகிறது. இசைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க, குறிப்பாக நான்கு முக்கிய வருடாந்திர அமெரிக்க பொழுதுபோக்கு விருதுகளில் ஒன்றாக, இந்த கிராமி விருது கருதப்படுகிறது. கலைஞர்களின் இசை சாதனைகளை கௌரவிக்கும் வகையில், முதல் கிராமி விருதுகள் விழா 1959-ல் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விருதை இந்தியர்களும் தொடர்ந்து பெற்று பெருமை சேர்த்து வருகின்றனர். இந்திய இசையமைப்பாளர் ரவி ஷங்கர், “west meets east” என்ற ஆல்பத்திற்காக முதல் கிராமி விருதை வாங்கி, உலகளவில் இந்தியாவின் அங்கீகாரத்தை பதிவு செய்தார். அன்று தொடங்கி தற்போது வரை பல நாமினேஷன்ஸ், பல விருதுகளை வென்று இந்தியர்கள் தங்கள் தடத்தை பதிவு செய்தும் வருகின்றனர். அந்த வரிசையில் கிராமி விருது 2022 நிகழ்ச்சியில் மூன்றாவது முறையாக கிராமி விருது பெற்று அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ரிக்கி கேஜ்.
1981-ல் பிறந்த இவர் பிறப்பால் பாதி பஞ்சாபி மற்றும் மார்வாடி. பெங்களூரில் வசித்து வரும் ரிக்கி கேஜ், அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல் மருத்துவக் கல்லூரியில், பல் மருத்துவ படிப்பை முடித்தார். இசையின் மீதுள்ள ஆர்வத்தால் தனது துறையில் தொடராமல் இசைத் தொழிலைத் தேர்ந்தெடுத்தார். ராக் இசைக்குழுவான ‘ஏஞ்சல் டஸ்டினில்’ கீபோர்டு கலைஞராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 24 வயதில் கிளாசிக்கல் இசையை பயின்றார். இது, பெரும்பாலும் இந்துஸ்தானி கிளாசிக்கல் இசை மற்றும் சிறிது கர்நாடக இசையை அடிப்படையாக கொண்ட ரிக்கி கேஜ் இசைக்கு, அடித்தளமாக அமைந்தது.
2015-ல் தனது முதல் கிராமி விருதை ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சார’ என்ற ஆல்பத்திற்காக சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் வென்றார். தற்போது 64-வது கிராமி விருதுகளில் சிறந்த புதிய வயது ஆல்பம் பிரிவில் ‘டெவைன் டைட்ஸ்’ க்காக ஸ்டீவர்ட் கோப்லாண்டுடன் இணைந்து அவர் கோப்பையைப் பெற்றார். இந்த விருது மூலம் மூன்று கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையயும் பெற்றார். “உங்களால் நான் இருக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியோடு இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.
இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளையும் பெற்ற ரிக்கி கேஜ், ஒரு சுற்றுச்சூழல் ஆய்வாளரும் கூட. அதற்கான அங்கீகாரத்தையும் உலகளவில் பதித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகள் “நல்லெண்ண தூதர்”, UNCCD “நிலத் தூதுவர்”, UNESCO MGIEP “தயவுக்கான உலகளாவிய தூதர்”, UNICEF “பிரபல ஆதரவாளர்”, புவி நாள் நெட்வொர்க் “தூதர்”, ஆசிய முன்முயற்சிகள் “நல்லெண்ண தூதுவர்” என இவரின் பங்களிப்புகள் எண்ணற்றவை.
- ஐஸ்வர்யா, நியூஸ் 7 தமிழ்.