இந்திய அணி அபார வெற்றி

இந்தியா – பாகிஸ்தான் இடையே  நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.  பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்திய அணியின்…

இந்தியா – பாகிஸ்தான் இடையே  நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்திய அணியின் முதலாவது லீக் ஆட்டம் இன்று நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடந்தது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியும், பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய பூஜா வஸ்த்ரகர் 67 ரன்களும், சினே ராணா 53 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் நிதா தர், நஷ்ரா சந்து தலா 2 விக்கெட்டுகளையும், பாத்திமா சனா, டயானா பெய்க் மற்றும் அனாம் அமீன் தலா 1 விக்கெட்டுகளை வீழத்தினர்.

இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள், இந்திய அணியின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 137 ரன்களில் சுருண்டது. இதன் மூலம், 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய 10 போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.