“அதிமுக கூட்டணியில் அமமுக இணைவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” – டிடிவி தினகரன்!

செங்கோட்டையன் சொல்வது போல நான் சூழ்நிலை காரணமாக என்டிஏ கூட்டணிக்கு செல்லவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 1986 முதல் ஜெயலலிதாவுடன் பயணிப்பதால் மேல்மட்டம் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் என்னுடன் நெருங்கி பழகுவார்கள்.

அனைவருமே ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உறவினர்கள் போல தான் பழகுவோம். அண்ணன் செங்கோட்டையன் எனக்கு மூத்த சகோதரர் போல, அவர் தவெகவிற்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன் என்னிடம் சொன்னார். தவெகவிற்கு வரும்படி செங்கோட்டையன் என்னை அழைத்தார். அவரின் அழைப்பை தட்ட முடியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன். செங்கோட்டையன், தவெகவிற்கு சென்ற பின்பும் பலமுறை சந்தித்து பேசி உள்ளேன். அவர் ஏன் உங்களை விட்டு பிரிந்து சென்றார் என டெல்லியில் கேட்டார்கள், மீண்டும் அவரை அழைத்து வாருங்கள் என என்னிடம் சொன்னார்கள்.

முக்கியமான தலைவர் உங்களை அழைத்தார் என கூறினேன் ஆனால், செங்கோட்டையன் அது சரி வராது என தெரிவித்துவிட்டார். செங்கோட்டையன் சொல்வது போல நான் சூழ்நிலை காரணமாக என்டிஏ கூட்டணிக்கு செல்லவில்லை. எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது, நானாக முடிவு எடுத்து என்டிஏ கூட்டணிக்கு சென்றேன். அரசியல் என்பது சதி நிறைந்த துறை, நிறைய சகுனிகள் இருப்பார்கள், அதையும் நாம் கடந்து தான் செல்ல வேண்டும். ஒரு ஆட்சி அமையும் போது Healthy Relationship வேண்டும் என்பதற்காக நான் போட்டியிடவில்லை.

அம்மா ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என நட்பு ரீதியாக அதிமுக அழைத்தனர். எடப்பாடி பழனிசாமி அமமுக தங்கள் கூட்டணியில் வர வேண்டும் என விருப்பப்பட்டார். அம்மா ஆட்சி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதிமுக சென்றேன். வைத்திலிங்கம் திமுகவுக்கு சென்றது வருத்தமளிக்கிறது. நாங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்றாக இருந்தவர்கள். அவருடைய சூழ்நிலையால் திமுகவுக்கு சென்று விட்டார். நான் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என வைத்தியலிங்கம் நினைத்தார். நான் எப்படி திமுகவுக்கு செல்ல முடியும்.

அதிமுக – அமமுக “ஜெல்” ஆகிவிட்டோம். பிரிந்து கிடந்த அதிமுக ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும் என மக்களே சொல்வார்கள். எங்கள் கட்சியினர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம்.
அதற்காக கூட்டணியில் அமைச்சரவை வேண்டும் என அழுத்தம் கொடுக்கவில்லை. கூட்டணியில் நாங்கள் நியாமான கோரிக்கைகளை தான் வைப்போம். என்னுடைய முதல் சாய்ஸ் என்டிஏ தான் என ஏற்கனவே சொல்லியுள்ளேன்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். 2021 வரை அதிமுகவில் இருந்த போது செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார். அவர் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தில் தானே உள்ளார். அதிமுக ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்ந்து கொண்டுள்ளார்.

இது என்னவென்று எனக்கு புரியவில்லை, அதிமுக கூட்டணியில் அமமுக இணைவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சசிகலா நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை. அதிமுக கூட்டணியில் அமமுக இணைவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.