நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது…

கருணாநிதி உரையாடல் எழுதிய பூம்புகார் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளை பாட மறுத்தார் கே.பி.சுந்தராம்பாள். ஆத்திகம் உரைக்கும் எனது குரல், நாத்திகத்தை ஒலிக்காது என மறுத்தது குறித்த கட்டுரை இது… “இந்திய அரசியலில்…

கருணாநிதி உரையாடல் எழுதிய பூம்புகார் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளை பாட மறுத்தார் கே.பி.சுந்தராம்பாள். ஆத்திகம் உரைக்கும் எனது குரல், நாத்திகத்தை ஒலிக்காது என மறுத்தது குறித்த கட்டுரை இது…

“இந்திய அரசியலில் கவர்ச்சிமிகு தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர், எந்த வீழ்ச்சிக்கிடையிலும் எழுந்து நிற்பவர் கருணாநிதி” என அவரது நண்பர் கவியரசர் கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள் இவை.. அதை தனது வசனங்களில் உருவான திரைப்படங்களில் நிரூபித்திருப்பார் கருணாநிதி. பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சியும் மனோகராவில் பொங்கி எழும் அரசவை காட்சியும் சிவாஜியின் நடிப்புக்கு கட்டியங்கூறும்…மனோகரா திரைப்படத்தில், பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என, சிவாஜி என்ற வேங்கையை வீறு கொண்டு எழச் செய்திருப்பார்…


திரைப்பட வசனங்களைத் தாண்டி 20க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ள கருணாநிதியின் வரிகளை பூம்புகார் திரைப்படத்தில் பாட மறுத்தார் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்கிற கே.பி சுந்தராம்பாள். சிறந்த பக்திப் பாடகரான அவர், கருணாநிதி பூம்புகார் திரைப்படத்தில் ‘அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது… நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது’ என தொடங்கும் வரிகளை பாட மறுத்துவிட்டார்.. தெய்வபக்தி உள்ள நான், தெய்வம் எங்கே சென்று விட்டது என பாட முடியாது என கூறிவிட்டார். வேறு பாடகியை பாட வைத்துவிடலாம் என பிறர் சொல்ல, கருணாநிதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவரே தான் பாட வேண்டும் என கூறி அந்த வரியில் … நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது என மாற்றம் செய்து கேபிஎஸ் இடம் கொடுக்க சொன்னார். அவரும் மகிழ்ச்சியுடன் பாடினார்.


பாடல் வரிகள் திரையில் வரும்போது நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது என கண்ணகியாக நடித்த விஜயகுமாரி, அரச மாளிகையில் இருந்து படு ஆவேசமாக வெளியேறுவது போல் காட்சி அமைந்தது. தெய்வம் என வரிகள் வரும்போது சாமி அல்லது அம்மன் சிலைக்கு பதிலாக கதாநாயகியான கண்ணகியை காட்டி, கேபிஎஸ்-சையும் திருப்திப்படுத்தி தன் கொள்கையையும் சாதுர்யமாக நிலைநிறுத்திக் கொண்டார் பன்முகக்கலைஞர் கருணாநிதி…அனல் பறக்கும் வசனம், தெறிக்கும் பகுத்தறிவு கருத்து, தித்திக்கும் செந்தமிழ் என முத்திரை பதித்த கருணாநிதியின் வரிகளை பாட கே.பி.சுந்தராம்பாள் மறுத்த சம்பவம் அன்றைய நாட்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.