அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சிறுமி தன்வி மருபல்லி, 75 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயிருந்த நிலையில், ஆர்கன்சாஸில் உள்ள வீட்டிலிருந்து 1,600 கி.மீ தொலைவில் உள்ள புளோரிடாவில் மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஐடி நிறுவன ஊழியர்களுக்கான பணிநீக்கம் தொடரும் நிலையில், தனது தந்தைக்கும் வேலை போய்விட்டால் குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியா செல்லக்கூடும் என்கிற அச்சத்தில், 15 வயதான தன்வி மருபல்லி என்கிற சிறுமி கடந்த ஜனவரி 17 அன்று தனது வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
இது குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதோடு, தன்வி மருபல்லியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் முயற்சியும் முடுக்கி விடப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து தந்தை பவன் ராய் கூறுகையில், “எனது மனைவிக்கு வேலை போய்விட்டது, இனி நான் தான் மீதம் இருக்கிறேன். எனவே எனக்கு எப்போது வேலை போகும் என்று தெரியாது என்பதால் மனைவியையும், தன்வியையும் முதலில் இந்தியா போய்விடுங்கள் என்று நான் கூறிருந்தேன்.
ஆனால் தன்வியோ இந்தியா செல்லும் திட்டத்தை முற்றிலுமாக மறுத்தாள். அவளுக்கு அமெரிக்கா பிடித்திருப்பதாகவும் எனவே அமெரிக்காவிலேயே இருந்துவிட
போவதாகவும் கூறியிருந்தால். அவளை எவ்வளவு சமாதானப்படுத்த முயன்றாலும் பிடிவாதத்தில் உறுதியாக நின்றதோடு, இப்படி செய்துவிட்டாள்” என அவர் கூறிருந்தார்.
அமெரிக்க காவல்துறைக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்திருந்த இந்த வழக்கு, 50 நாட்களை கடந்தும் அந்த சிறுமி எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த விஷயம் மிகவும் அரிதான ஒரு சம்பவமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் முயற்சியை கைவிடாத காவல் துறையினர் தற்போது 75 நாட்களுக்கு பிறகு, ஆர்கன்சாஸில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிலிருந்து 1,600 கி.மீ தொலைவில் உள்ள புளோரிடாவில் பாதுகாப்பாக அவரை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரியன வில்லியம் டேப்லி கூறுகையில் “நூலகத்தின் மீதான தன்வியின் ஆர்வமே இறுதியில் அவரை கண்டுபிடிக்க வழிவகுத்து எனவும், காரணம் புளோரிடாவின் தம்பாவில் உள்ள ஒரு உள்ளூர் நூலகத்தில் அவள் பணிபுரிந்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் தங்களால் அவளை கண்டுபிடிக்க முடிந்ததாகவும், அவள் ஒரு ‘லிட்டில் ராம்போ’, அதனால் தான் அவளால் இத்தனை நாட்கள் உயிர் பிழைக்க முடிந்தது. அவள் மிகவும் பாதுகாப்பாக நீண்ட மலையேற்றத்தை எல்லாம் கடந்து வந்து தான் இங்கு பணிபுரிந்து வந்துள்ளாள்” என்று அவர் கூறினார். இந்த சம்பவத்தில் அந்த சிறுமியை கண்டுபிடித்து அழைத்து வர உதவி செய்பவர்களுக்கு $25,000 வெகுமதியாக அளிக்க்கப்படும் என தன்வி மருபல்லியின்
குடும்பத்தினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
- பி.ஜேம்ஸ் லிசா









