தண்டனை வாங்கித் தருவது மட்டுமல்ல, குற்றங்கள் ஏற்படாத சூழலை உருவாக்கித் தருவது காவல்துறையின் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார்.
சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில், வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கைகளால், இந்நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் உட்பட கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 வரை என 322 பதக்கங்கள் 319 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டு, அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் காவல் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு தீரச்செயல், தகைசால் பணி, மெச்சத்தக்க பணி, சிறந்த நற்பணி, பொதுச் சேவையில் சீர்மிகு பணி, சீர்மிகு புலனாய்வு, சீர்மிகு காவல் பயிற்சி, சிறப்புச் செயலாக்கம், விரல் ரேகை அறிவியலில் சீர்மிகு பணி, தொழில்நுட்ப சிறப்புப் பணி, தடய அறிவியலில் சீர்மிகு பணி ஆகியவற்றிற்கான பதக்கங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீரதீர செயல், பணியின் போது சேவை செய்ததது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. பதக்கங்கள் பெற்ற காவல் துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். காவலர்கள் என்றாலே வீர, தீர செயல் செய்பவர்கள் தான், இவர்கள் எங்களுக்கு கிடைத்திருக்க கூடிய பொக்கிஷங்கள். காவல்துறை என்பது குற்றங்களை உருவாகாத சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தம்முடைய கடமையில் இருந்து தவறும் போது, அது காவலர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி விடும். காவல் துறையினர் தலை நிமிர்ந்து இருக்க வேண்டுமே தவிர தலை குனிந்து இருக்க கூடாது. காவல்துறை மக்களுடன் நெருக்கமாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். அமைதியான சூழ்நிலையில் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால் தான் தொழில்துறையினர் வருகின்றனர். கூலிப்படை, போதை பொருள் கடத்தல், கள்ளச்சாராயம் உள்ளிட்டவை முற்றிலுமாக ஒழித்தெறிய வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு, காவலர்கள் குடும்பத்தை பொறுத்த வரை இந்த நிகழ்ச்சி ஒரு திருவிழா. பல ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாமல் இருந்த சுமார் 2000 காவலர்களுக்கு சிறு சிறு தவறுகளை களைந்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வாரம் ஒருநாள் ஓய்வு என்ற அறிவிப்பு தற்போது சட்டவடிவம் பெற்று காவலர்களின் உரிமையாக மாறிவிட்டது என தெரிவித்தார்.








