திருச்சி மாவட்ட ஆட்சியர் உரிய உதவிகள் செய்வதாக தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய போது, அங்கு பொதுமக்கள் பகுதியில் நின்றிருந்த 7 வயது சிறுமி திடீரென ‘ஸ்டாலின் அங்கிள், என்னை படிக்க வையுங்கள்’ என்று சத்தம்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த சிறுமியின் குரல் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டுவதற்குள் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அந்த சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, தனது குடும்பம் வறுமையால் வாடுவதாகவும், இதனால் பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை எனவும் அந்த சிறுமி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் பிரதீப்பிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்பும் உறுதியளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சத்தம் போட்டு அழைத்து படிக்க உதவி கோரிய அந்த சிறுமியின் பெயர் காவ்யா. இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். காவ்யாவின் தந்தை திருச்சி மாவட்டம்
மணப்பாறையை சேர்ந்தவர் என்றும், கடந்த 1 வருடத்துக்கு முன்பு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது காவ்யா தனது தாய் கவிதா, சகோதரர் கவின்குமார் ஆகியோருடன் கோவை சிங்காநல்லூரில் வசித்து வருவதாகவும், தந்தையின் மறைவிற்கு பின்னர் குடும்பம் மிகவும் சிரமத்தில் இருப்பதால் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவித்து வந்த நேரத்தில் தான், தாய் கவிதா தனது 2 குழந்தைகளுடன் திருச்சிக்கு வந்து ஒருவார காலமாக உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இந்த சமயத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார் என்ற தகவலறிந்து விமான நிலையத்திற்கு சென்ற காவ்யா குடும்பத்தினர் இரவு 9.30 மணி வரை காத்திருந்து
விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டதும், சிறுமி காவ்யா தன்னை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி சத்தம் போட்டு தனது கோரிக்கையை வைத்திருக்கிறார். இது குறித்து அதிகாரிகள் தற்போது விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், கவிதாவை இன்று நேரில் வரவழைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்
குமார் குறைகளை கேட்டறிந்தார். இதன் பிறகு முதலமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் தாயார் கவிதா நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், அவரது சொந்த மாவட்டமான கோவையில் அரசு துறையின் கீழ் வேலை வழங்குவதாகவும் குழந்தைகள் இருவரின் படிப்பிற்கு நிதி உதவியும் செய்வதாக உறுதி அளித்தார். இது மட்டும் அல்லாது கவிதாவின் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சனைகளை சட்டப்படி தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன்னிடம் தெரிவித்தாக சிறுமியின் தாயார் கவிதா நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டியளித்துள்ளார்.