அதிமுக-வை நம்பி பாஜக இருக்கிறதா அல்லது பாஜக-வை நம்பி அதிமுக இருக்கிறதா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையே இருந்த மோதல் போக்கு அண்மை காலமாகதான் குறைந்திருந்தது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்த நிலையில் டெல்லியில் அமித்ஷா உடனான சந்திப்பிற்கு பிறகு இரு தரப்பிலும் விமர்சன பேச்சை குறைத்துகொண்டனர். இதனால் இருதரப்பு மோதல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார் செல்லூர் ராஜு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்ணாமலையின் பேச்சை குறிப்பிட்டு பேசிய செல்லூர் ராஜு, ”பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது போல். தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு பாஜகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி “கரை சேர முடியாமல், பரிதாபமாக நட்டாற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை நங்கூரமிட்டு பாதுகாத்த வரலாற்றை மறந்து விட்டு தானாகவே கரை சேர்ந்ததாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள், ‘இனி நங்கூரம் தேவையில்லை’ என்ற அலட்சியப்படுத்தும் போக்கு தான் பரிதாபத்திற்குரியது.” எனக் கூறியுள்ளார்.
செல்லூர் ராஜு மற்றும் நாராயணன் திருப்பதியின் கருத்துகளால் மீண்டும் தமிழக பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.