அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கட்சியினர் ஆதரவுடன் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அனைவரும் வந்து ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகமாகும் என்றும் அதிமுக முக்கியப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை பசுமைவழிச்சாலையில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி ஓரங்கட்ட முடியும்? பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததே அவர் தான். அராஜகம் என்றால் என்ன? என்பதை மக்களும், ஊடகங்களும் தான் சொல்ல வேண்டும்.
அனைவரும் வந்து ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகமாகும்? முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூட்டிய பொதுக்குழுக் கூட்டங்கள் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளன.
நாளைய பொதுக்குழுவையும் உறுப்பினர்கள் அமைதியாக நடத்திக் காட்டுவார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பேசுவது பற்றி, அவர் தான் கூற வேண்டும். கட்சியில் நடைபெறக்கூடிய சம்பவங்களால் தொண்டர்கள் வருத்தமடைந்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வருத்தமடைந்துள்ளாரா என்பது தெரியவில்லை. நாளை நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் வளர்மதி.
அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.
முன்னதாக, அசாதாரண சூழல் நிலவி வருவதால் பொதுக் குழு மற்றும் செயல்குழுக் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை முன்வைத்திருந்தார். எனினும், அவரது கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-மணிகண்டன்