அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபீஎஸ், ஈபிஎஸ் இடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே அக்கட்சியினர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அதிமுகவின் மாணவரணி, மகளிர் அணி, அம்மா பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நேரடியாக வந்து ஆதரவைத் தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய பிறகு, அதிமுகவின் மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பொதுக் குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்றார். அடுத்ததாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், ஒற்றைத் தலைத்தலைமை குரல் ஓங்கி ஒலித்துவிட்டது. இனி யாராலும் அதனை தடுத்து நிறுத்த முடியாது என்றார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன், ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம் எனவும், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்றார்.
-ம.பவித்ரா







